Published : 12 Apr 2025 04:37 PM
Last Updated : 12 Apr 2025 04:37 PM
சென்னை: கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தகுதித் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை நேற்று மதியம் வெளியிட்டது. அவற்றை மாணவர்கள், பெற்றோர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், இத்தேர்வில் ஊக்கத் தொகை பெறுவதற்கு தகுதிபெற்ற 6,695 மாணவர்களின் விவரப் பட்டியலும் மேற்கண்ட வலைத்தளத்திலே வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவில் 1,992 மாணவர்கள், ஒபிசி 1,173 பேர், பிசிஎம் 234 பேர், எம்பிசி 1,338 பேர், எஸ்சி 995 பேர், எஸ்சிஏ 198 பேர், எஸ்டி 64, மாற்றுத்திறனாளிகள் 97 எனமொத்தம் 6,695 மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்களாவர். மேலும், கடந்தாண்டை விட இந்த வருடம் கட்ஆப் மதிப்பெண் சற்று உயர்ந்துள்ளது.
இதற்கிடையே என்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகை பெற நமது மாநிலத்துக்கு 6,695 இடங்கள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், சென்ற ஆண்டு 5,890 மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெற தகுதிபெற்றனர். பள்ளிக்கல்வித் துறையின் தொடர் நடவடிக்கைகளால் இந்தாண்டு முழு இடங்களுக்கும் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT