Published : 12 Apr 2025 06:50 AM
Last Updated : 12 Apr 2025 06:50 AM
சென்னை: தமிழகத்தில் 78 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பித்தல் பணிகள் மேற்கொண்டதற்காக, பள்ளிக்கல்வித் துறைக்கு தேசிய சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இடைநிற்றலின்றி கல்வி பயில ஏதுவாக, ஊக்கத்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஊக்கத்தொகை பயனர்களுக்கு தாமதமின்றி சென்று சேருவதை உறுதிசெய்வதற்காக, நேரடி பயனர் பரிமாற்றம் (டிபிடி) திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், பயனர்களான மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக உதவித் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக மாணவர்கள் வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகும். அந்தவகையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆதார் அட்டை பெறுதல், புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிகளிலேயே ஆதார் பதிவு திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்தியது. 2024 பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 78 லட்சத்து 45,608 பேருக்கு ஆதார் புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 12 லட்சத்து 81,426 பள்ளி மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு ஆதார் பதிவுப் பணிகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இதில் சிறந்த இலக்கை தேசியளவில் தமிழகம் மட்டுமே எட்டி முதலிடம் பெற்றுள்ளது. இதைப் பாராட்டி, மத்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்த விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காண்பித்து வாழ்த்து பெற்றார். பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT