Published : 07 Apr 2025 01:16 AM
Last Updated : 07 Apr 2025 01:16 AM
சென்னை: சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதி பெற்றவர்களை பட்டியலை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியர்களுக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தலைமை ஆசிரியர்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்து அதுசார்ந்த விவர அறிக்கையை மாநில தேர்வுக் குழு வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளவர்கள், தண்டனை பெற்றவர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோரை விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது என்பன உட்பட வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT