Published : 04 Apr 2025 12:15 AM
Last Updated : 04 Apr 2025 12:15 AM
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று (ஏப்ரல் 4) தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 46 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT