Published : 31 Mar 2025 06:26 AM
Last Updated : 31 Mar 2025 06:26 AM
சென்னை: மின்னணுவியல், ஆட்டோமேஷன், 3டி பிரிண்டிங் போன்ற முன்னணி துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச திறன் பயற்சி வழங்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு வகையான திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சிபெற்ற 28 இளைஞர்கள் அசோக் லேலாண்ட், ஜி-கேர் இந்தியா, டிசிஎஸ், தெர்மோபிஃசர் போன்ற தனியார் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. இதில் சிஸ்டம் இன்ஜினியரிங், மின்னணுவியல் வடிவமைப்பு, உற்பத்தி துறை, இன்டஸ்டிரியல் ஆட்டோமேஷன், இயந்திரவியல், 3டி பிரிண்டிங் போன்ற முக்கிய துறைகள் சார்ந்த திறன்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவற்றின் மூலம் தொழில்நுப்ட புத்தாக்க நிறுவனங்களை உருவாக்க இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
இப்பயிற்சியை பெறுவதற்கு 2022, 2023, 2024ம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலைப் பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று, 21 முதல் 25 வயதுக்குட்பட்ட, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் மிகாமல் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 18 வாரம் நடைபெறும் இந்த பயிற்சியானது கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மின்னணு உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோமோடிவ் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று, மாதம் ரூ.20 ஆயிரம் வரை ஊதியமாக பெறலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் ஏற்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT