Published : 30 Mar 2025 10:15 AM
Last Updated : 30 Mar 2025 10:15 AM
அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை கடிதமாக எம்எல்ஏக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 2021ம் ஆண்டு முதல் இதுவரை முடிக்கப்பட்ட கட்டிடப் பணிகள், இனி வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டிட விவரங்களை 234 தொகுதிகளின் எம்எல்ஏக்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: அரசுப் பள்ளிகள் மற்றும் பொது நூலகங்களில் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு சார்ந்த கோரிக்கைகள் வரப் பெற்றிருந்த ன. அதில் முதற்கட்டமாக புதிய கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பள்ளி, நூலகங்களின் விவரம் மற்றும் பணிகள் நடைபெற்று வரும் பள்ளி, நூலகங்களின் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.3,497 கோடியில் 8,171 வகுப்பறைகள், 52 ஆய்வகங்கள், 184 கழிப்பறைகள், 752 மீட்டர் சுற்றுச் சுவர்கள், 28 நூலகக் கட்டிடங்கள், 10 மாணவர் விடுதிகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 4,412 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 323 கழிப்பறைகள் மற்றும் 2,290 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டத்தின் கீழ் 1,204 வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. வரும் 2025 - 26 நிதியாண்டிலும் ரூ.1,000 கோடி நிதி பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டிடப் பணிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT