Published : 27 Mar 2025 07:19 PM
Last Updated : 27 Mar 2025 07:19 PM
சென்னை: அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டுமென துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இத்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில் கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்.
அந்தப் பட்டியலில் இடம்பெறும் பணியாளர்கள் 2024 டிசம்பர் 31-ம் தேதிக்குள் குறிப்பிட்ட பாடத்தில் இளநிலைப் பட்டமும், பிஎட் படிப்பும் முடித்திருக்க வேண்டும். இதுதவிர சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உதவி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெற வேண்டும். அவர்கள் மீது துறை சார்ந்து எவ்வித புகார்களும், நடவடிக்கைகளும் நிலுவையில் இல்லாதவாறு உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT