Published : 14 Mar 2025 04:27 PM
Last Updated : 14 Mar 2025 04:27 PM
சென்னை: “நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்,” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். உயர் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “தமிழகத்தில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி முறையில் மாணவர்கள் அதிகம் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளில் கூடுதலாக 15,000 இடங்கள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.
இம்முயற்சிக்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் மனிதவளத்துக்கென 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தைப் பொறுத்தவரை நாட்டுக்கே முன்னோடியாக தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. அந்தச் சாதனை அளவை மேலும் உயர்த்திடும் வகையில், கல்லூரி மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வியினைத் தொடர்ந்து வழங்கிட இந்த அரசு பல முன்முயற்சிகளை எடுத்து வருகிறது.
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் திறன்மிகு வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள். மின் பதிப்புகள் கொண்ட நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 2025-26 ஆம் ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம். போக்குவரத்துக் கட்டணம் என அவர்களின் மொத்தக் கல்விச் செலவையும் முழுமையாக அரசே ஏற்றுக்கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு தொழிற்படிப்புகளில் தற்போது பயின்று வரும் 41,038 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றிடும் வகையில், வரும் நிதியாண்டிற்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழகத்தில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT