Published : 13 Mar 2025 07:43 AM
Last Updated : 13 Mar 2025 07:43 AM
வேலூர்: சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ் என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டது.
இது தொடர்பாக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அவற்றின் கல்வித்தரம். ஆசிரியர்கள் நன்மதிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேச ஆராய்ச்சி வலையமைப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ் என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, கலை பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், லைஃப் சயின்ஸ், சமூகம், இயற்கை அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட 14 பாடப் பிரிவுகளில், உலக அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. முதன் முறையாக நடப்பாண்டு தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு பாடம் ஆகியவையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
70 இடங்கள் முன்னேற்றம்: அதனடிப்படையில், நடப்பாண்டு இந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் பொறியியல், தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 142-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 70 இட இடங்கள் முன்னேறியுள்ளது. இதேபோல, தேசிய அளவில் விஐடி பல்கலைக்கழகம் 9-வது இடம் பிடித்து உள்ளது.
மேலும், சர்வதேச அளவில் இயற்கை அறிவியல் பாடத்தில் 401-450 தர வரிசையிலிருந்து 362-ஆக உயர்ந்துள்ளது. உயிரி அறிவியல் பாடத்தில் 351-100 தரவரிசை. வணிக மேலாண்மைப் பாடத்தில் 551-600 தரவரிசை, வேளாண்மை, வனவியல் பாடத்தில் 351-400 தரவரிசையைத் தக்கவைத்துள்ளது.
இதுதவிர, கணினி அறிவியல் பாடத்தில் 136-வது இடத்திலிருந்து 110-வது இடத்துக்கும், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவுப் பாடத்தில் 51-100 தர வரிசையையும், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலில் 151-200 தரவரிசையும், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் 201-250 தரவரிசையும், விமானம் மற்றும் உற்பத்திப் பொறியியல் பாடத்தில் 252-300 தரவரிசையும் பெற்றுள்ளது.
மெட்டீரியல் சைன்ஸ் பாடத்தில் கடந்த ஆண்டு 201-250 தரவரிசையில் இருந்து இந்த ஆண்டு 151-200 தரவரிசைக்கும். வேதியியல் பாடத்தில் 351-400 தரவரிசையில் இருந்து 301-350 தரவரிசைக்கும். இயற்பியல் மற்றும் வானியல் பாடத்தில் 451-500 தரவரிசையில் இருந்து 401-450 தரவரிசைக்கும் முன்னேறி உள்ளது.
இதேபோல, புள்ளியியல் பாடத்தில் 251-275 தரவரிசையைப் பெற்றுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT