Published : 12 Mar 2025 05:57 AM
Last Updated : 12 Mar 2025 05:57 AM

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் கட்டணமின்றி வழங்கப்படும் ஹோட்டல் மேனேஸ்மென்ட் படிப்புகளில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10, 12-ம் வகுப்பில் 45 சதவீத மொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தில், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

அதன்படி தாட்கோ சார்பில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 3 ஆண்டு முழுநேர பட்டப்படிப்பான பிஎஸ்சி ஹோட்டல் நிர்வாகம், ஒன்றரை ஆண்டு முழுநேர பட்டயப்படிப்பான டிப்ளமோ உணவு தயாரிப்பு, அதேபோல் 10-ம் வகுப்பு முடிந்த மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் ஆகிய படிப்புகள், சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்புகளுக்கான செலவுகள் தாட்கோ மூலம் ஏற்கப்படும். படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், மாணவர்களின் திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத்துறை, கப்பல்துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். அந்தவகையில் தரமணியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து இந்த படிப்புகளை பயில விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவுசெய்து பயனடையுமாறு ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x