Published : 12 Mar 2025 12:37 AM
Last Updated : 12 Mar 2025 12:37 AM

தட்டச்சு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ‘தமிழ் 99’ கீ போர்டை பயன்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

புதிதாக தமிழ் தட்டச்சு பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் 99 விசைப்பலகையை (‘கீ போர்டு) பயன்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் என்று வணிகவியல் பயிலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வணிகவியல் பயிலகங்களுக்கு தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட அரசாணையின்படியும், தமிழ் இணைக்கல்விக் கழக இயக்குநரின் உத்தரவின்படியும், தமிழ் 99 விசைப்பலகை (கீ போர்டு) மட்டுமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை ஆகும். எனவே, தமிழ் 99 விசைப்பலகை மூலமாக தொழில்நுட்ப பயிலகங்கள் தமிழ் தட்டச்சு பயிற்சி அளிக்க வேண்டும்.

அதன்படி, தட்டச்சு பயிற்சி அளிக்கும் வணிகவியல் நிறுவனங்கள், புதிதாக தட்டச்சு பயிற்சியைத் தொடங்கும் மாணவர்களுக்கு தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தி தட்டச்சு பயிற்சி அளிக்க வேண்டும். அதேநேரம், ஏற்கெனவே பயிற்சி மேற்கொண்ட மாணவர்களின் நலன் கருதியும், வணிகவியல் பயிலகங்கள் படிப்படியாக மேம்படுத்த ஏதுவான சூழல் அமையவும், சில தேர்வுகளுக்கு மட்டும் பழைய தட்டச்சு இயந்திர விசைப்பலகை கொண்ட தட்டச்சு இயந்திரங்கள் மூலமும் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x