Published : 04 Mar 2025 12:28 PM
Last Updated : 04 Mar 2025 12:28 PM
சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 5) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை தமிழகத்தில் 8.23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை (மார்ச் 5) முதல் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 மையங்களில் 8.23 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் 7,557 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 18,369 மாணவர்கள், 4,755 தனித் தேர்வர்கள் மற்றும் 137 கைதிகளும் அடங்குவர்.
பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சுமார் 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகளை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் பொருள்கள் கொண்டுவர தடை உள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு (hall ticket) உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக் கூடாது.
அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத் தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இதுதவிர பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவற்றை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT