Published : 04 Mar 2025 12:38 AM
Last Updated : 04 Mar 2025 12:38 AM
தமிழகத்தில் 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர். அவர்களில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 568 பேர் பள்ளி மாணவ, மாணவிகள். 18,344 பேர் தனித்தேர்வர்கள். 145 பேர் சிறைவாசிகள்.
பறக்கும் படை சோதனை: மாநிலம் முழுவதும் தேர்வுப் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்காக 4,470 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுதவிர, மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, வட்டாரக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் தலைமையிலான சிறப்பு கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
துறை செயலர் ஆய்வு: சென்னை அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பள்ளிக்கல்வித் துறை செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா, மாநில முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரும், மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலருமான எம்.பழனிசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சந்திரமோகன் கூறும்போது, ‘‘பொதுத்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வுப் பணியை ஆய்வு செய்ய மாநிலம் முழுவதும் 45 தேர்வு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளோம். மேலும், 10 மையங்களுக்கு 2 பேர் என்ற வகையில் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 64,641 பேர் தேர்வு எழுதுகின்றனர். பூந்தமல்லி பள்ளி தேர்வு மையத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர் முதல்முறையாக கணினியைப் பயன்படுத்தி தேர்வு எழுதுகிறார்" என்றார்.
கடும் கட்டுப்பாடுகள்: இதற்கிடையே, ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வறைகளில் மாணவர்களுக்கும் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் காலை 9 மணியளவில் வருகை தந்தனர். அவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து தேர்வறைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். சரியாக 9.30 மணிக்கு அனைவரும் தேர்வறைகளுக்குள் சென்றுவிட்டனர். 10 மணிக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டன. மாணவர்கள் வினாத்தாளை படித்துப் பார்க்க 15 நிமிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 10.15 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வு தொடங்கியது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.
தமிழ் தேர்வு எளிது: தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாகவும், சிறு வினா மற்றும் நெடுவினா பகுதியில் மட்டும் ஒருசில வினாக்கள் சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். தமிழ் தேர்வைத் தொடர்ந்து ஆங்கிலம் தேர்வு 6-ம் தேதி நடைபெறுகிறது. முக்கிய பாடங்களான கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட தேர்வுகள் 11-ம் தேதி நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT