Published : 03 Mar 2025 04:35 AM
Last Updated : 03 Mar 2025 04:35 AM
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 3) முதல் தொடங்குகிறது. முறைகேடுகளை தடுக்க 4,470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர். இதில் 7,518 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 02,568 மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 கைதிகளும் அடங்குவர்.
பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம்
தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். மேலும், எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், வேறு கலர் பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்பு குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இதுதவிர பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவற்றை 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக்கல்வித் துறையின் 14,417 உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
முதல்வர் வாழ்த்து: பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பிளஸ் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 21,057 பேரும், பிளஸ் 1 தேர்வை 8 லட்சத்து 23,261 மாணவர்களும் எழுதுகின்றனர். கடந்த ஒராண்டாக மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இந்த தேர்வுகள் உங்கள் உயர்கல்விக்கும், வாழ்க்கைக்கும் முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும்.
நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளை தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும் எனக்குள்ளது. பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களது உயர் கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. நானும் தமிழக அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT