Published : 20 Feb 2025 06:59 PM
Last Updated : 20 Feb 2025 06:59 PM

பிப்.28-ல் சென்னை ஐஐடி நடத்தும் இந்தியாவின் மிகப் பெரிய ஆராய்ச்சி, மேம்பாடு கண்காட்சி!

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), ‘இன்வென்டிவ் 2025’ (IInvenTiv 2025) கண்காட்சியை வரும் 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடத்த இருப்பதாகவும், இதில், ஐஐடி-க்கள், என்ஐடி-க்கள், ஐஐஎஸ்இஆர்-கள் மற்றும் என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்ற 50 முதன்மைக் கல்வி நிறுவனங்களின் புத்தம்புது கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும் என்றும் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தெரிவித்துள்ளார்.

‘இன்வென்டிவ் 2025’ கண்காட்சி தொடர்பாக வி. காமகோடி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “‘இன்வென்டிவ் 2025’ (IInvenTiv 2025) கண்காட்சி வரும் 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்காட்சியை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைக்க இருக்கிறார். முன்னணித் தொழில்துறையினர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஐஐடி-க்கள், என்ஐடி-க்கள், ஐஐஎஸ்இஆர்-கள் மற்றும் என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்ற 50 முதன்மைக் கல்வி நிறுவனங்களின் புத்தம்புது கண்டுபிடிப்புகள் இதில் காட்சிப்படுத்தப்படும். இதற்காக, 185 கண்டுபிடிப்புகளை நிபுணர் குழுவினர் ஏற்கனவே தெரிவு செய்துள்ளனர். இன்னும் பல கண்டுபிடிப்புகள் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சி, இந்தியத் தொழில்துறைக்கு சிறந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதுமைகளைக் காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வளர்ச்சி அடைந்த இந்தியா 2047-ல் சந்தேகத்திற்கு இடமின்றி ஸ்டார்ட்அப் மற்றும் தயாரிப்புகளின் நாடாக இந்தியா இருக்கும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தவும், தாங்கள் தொழில் ஊக்குவிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பரிமாற்றங்கள், சந்தைக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் இந்த கண்காட்சி ஒரு தளமாக அமைந்துள்ளது" என தெரிவித்தார்.

2022-ம் ஆண்டில் ஐஐடி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்வென்டிவ் தொடங்கப்பட்டது. இதில் ஐஐடிக்களின் ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பணிகள் மட்டும் இடம்பெற்றன. ஜனவரி 2024 -ல் ஐஐடி ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது நிகழ்ச்சியில் ஐஐடிக்கள், ஐஐஎஸ்சிக்கள், ஐஐஎஸ்இஆர்கள் தவிர என்ஐஆர்எப் தரவரிசையில் முதல் 50 இடங்களைப் பிடித்துள்ள கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்தத் தொடரின் மூன்றாவது நிகழ்வை தற்போது சென்னை ஐஐடி நடத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x