Published : 07 Feb 2025 06:05 AM
Last Updated : 07 Feb 2025 06:05 AM
சென்னை: மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகைக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான மேற்படிப்பு கல்வி உதவித்தொகை சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் இப்பிரிவு மாணவர்களுக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் வரும் பிப்.28-ம் தேதிக்குள் http://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் நடப்பாண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெற்று கல்லூரியில் 2, 3, 4-ம் ஆண்டு பயின்றுவரும் மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் கல்வி பயில்வது உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
அதேபோல் கடந்த ஆண்டில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் தங்களது கல்லூரியில் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி மேற்கண்ட இணையத்தின் மூலம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெரிந்துகொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT