Published : 06 Feb 2025 05:17 PM
Last Updated : 06 Feb 2025 05:17 PM

ஒப்பந்த முறையில் ஆசிரியர்கள் நியமனம்: யுஜிசி வரைவு அறிக்கைக்கு அண்ணா பல்கலை. ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு

சென்னை: ஒப்பந்த முறையில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தேவையான நிதியை வழங்கும் தனது தலையாய பணியை யுஜிசி மேற்கொள்ள வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.அருள் அறம் யுஜிசி தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: யுஜிசியின் வரைவு அறிக்கை எங்கள் பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்று கருதுகிறோம். ஆசிரியர்களை 6 மாத கால ஒப்பந்தத்தில் நியமித்து அதன்பிறகு அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து புதுப்பித்து வருவது ஆசிரியர்களின் கல்வித்தரத்தை பெரிதும் பாதிக்கும்.

ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 சதவீத ஆசிரியர்கள் மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். யுஜிசி வரைவு அறிக்கை அமலுக்கு வந்தால் இந்த ஒப்பந்த முறை பணிநியமனத்துக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்குவது போல் ஆகிவிடும். இதனால், பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த தரமும் பாதிக்கப்படும். மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் நிறுவப்பட்டு மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இயங்கி வருபவை.

அந்த வகையில் யுஜிசி வரைவு அறிக்கை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு உறுப்பினர்களை நியமிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலும் பறிப்பதாக உள்ளது. அதோடு பல்கலைக்கழகத்தின் சுயாட்சியை சிறுமைப்படுத்துகிறது. மாநில அரசால் இயற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத்தின்படி இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தை குறைத்து மதிப்பீடுவது ஜனநாயக விரோதம். யுஜிசி விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நடவடிக்கை என்று எச்சரிக்கை விடுப்பது சுதந்திரத்துக்கு இழைக்கப்பட்ட பெரிய மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டு இருப்பதை போல் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். கல்வி என்பது பொது பட்டியலில் உள்ளது. அந்த வகையில் கல்விக்குழு, கல்வி வாரியம் போன்ற அமைப்புகளை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை காரணம் காட்டி ஒரு மாநில பல்கலைக்கழகத்தை அடிபணிய வைத்துவிட முடியாது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது ஆகும்.

ஒவ்வொன்றின் தொலைநோக்குப் பார்வையும், திட்டமும் வேறு வேறாக இருக்கும். அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதுடன் பல்கலைக்கழகங்களின் சுதந்திரமான செயல்பாடுகளையும் முடக்கும் என்று கருதுகிறோம்.

எனவே, யுஜிசி வரைவு அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம். அவற்றை அமல்படுத்தக்கூடாது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரமான செயல்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். உண்மையில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த யுஜிசி விரும்பினால் நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவையான நிதியை வழங்க வேண்டிய தனது தலையாய பணியை யுஜிசி செய்ய வேண்டும். இதன்மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க முடியும். ஆய்வகம், கட்டிடம், சாதனங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சிறந்த முறையில் மேம்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x