Published : 27 Jan 2025 02:47 PM
Last Updated : 27 Jan 2025 02:47 PM
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), ஆசியாவிலேயே முதன்முறையாக உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டியை பிப். 21 முதல் 25 வரை நடத்துகிறது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி, ஆசியாவிலேயே முதன்முறையாக உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டியை (Global Hyperloop Competition-2025) பிப். 21 முதல் 25 வரை நடத்துகிறது. சென்னை ஐஐடி, ஐஐடிஎம் பிரவர்த்தக், எஸ்ஏஇ இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டிக்கு இந்திய அரசின் ரயில்வே அமைச்சகமும் ஒத்துழைப்பை வழங்குகிறது. ஹைப்பர்லூப் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதுடன், போக்குவரத்துத் துறையில் இளம் தலைமுறையினரை ஊக்குவித்து மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இப்போட்டி சென்னை ஐஐடி-ன் தனித்துவமான ஹைப்பர்லூப் சோதனை உள்கட்டமைப்பில் நடைபெறும். இந்திய ரயில்வேத் துறை, ஆர்சிலார் மிட்டல், எல் அண்ட் டி, ஹிண்டால்கோ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த அதிநவீன தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைப்பர்லூப் என்பது ஏறத்தாழ வெற்றிடக் குழாயில் பயணிக்கும் அதிவேக 5-வது போக்குவரத்து முறையாகும். காற்றுத் தடுப்பு குறைக்கப்பட்டுள்ளதால் அதிவேக ரயில் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தையும் தாண்டிச் செல்ல அனுமதிக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் கடந்த 2013-ம் ஆண்டில் ‘ஹைப்பர்லூப் ஆல்ஃபா’ என்ற வெள்ளை அறிக்கை மூலம் இவ்வுலகிற்கு ஹைப்பர்லூப் கருத்தை முன்மொழிந்தார்.
இப்போட்டியின் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத்த சென்னை ஐஐடி ஹைப்பர்லூப் ஆசிரிய ஆலோசகரான பேராசிரியர் சத்ய சக்ரவர்த்தி, “சரியான வாய்ப்புகளும் தளங்களும் வழங்கப்படும்போது மாணவர்கள் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு இந்த ஹைப்பர்லூப் போட்டி ஒரு சான்றாகும். எங்களின் தொலைநோக்குப் பார்வை போட்டிகளுக்கு அப்பாற்பட்டதாகும். போக்குவரத்தில் எது சாத்தியம் என்பதை மறுவரையறை செய்ய அடுத்த தலைமுறையினரை ஊக்குவித்து அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கித் தயார்படுத்துவதே எங்களது நோக்கம்” எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, ஐரோப்பா, துருக்கி மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய ஹைப்பர்லூப் சம்பந்தப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக நீடித்த மற்றும் அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளை ஏற்றுக் கொள்வதை விரைவுபடுத்துவதுதான் இப்போட்டியின் இலக்காகும். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், அடுத்த தலைமுறை பொறியாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு யோசனைகள், நிபுணத்துவம், உத்வேகம் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள உலகளாவிய தளத்தை வழங்கும். இதனால் வாகன இயக்கத்தின் எதிர்காலத்தை அவர்கள் கற்பனை செய்து கட்டமைக்க முடியும்.
இதுபோன்ற போட்டிகளின் அவசியம் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி மாணவர் தலைவர் (ஹைப்பர்லூப்) பிரணவ் சிங்கால், “இந்தியாவில் பல்துறை ஒத்துழைப்பு, புதுமைகளை வளர்ப்பதற்கான எங்களது நோக்கத்தை விளக்கும் வகையில் உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டி அமைந்துள்ளது. தையூரில் உள்ள 450 மீட்டர் சோதனைப் பாதை சென்னை ஐஐடி-க்கு ஒரு மைல்கல் மட்டுமல்ல. உலகெங்கும் உள்ள ஆர்வம் மிகுந்த பொறியாளர்களுக்கு ஓர் கலங்கரை விளக்காகவும் அமைந்துள்ளது. வாகன இயக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் புத்திகூர்மை, குழுவாகப் பணியாற்றுதல் போன்றவற்றின் ஆற்றலை நிரூபிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்: உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டி உலகெங்கிலும் உள்ள திறமை மிகுந்த, முற்போக்கு சிந்தனை கொண்ட அணிகளை ஒன்றிணைப்பதாகும். நடப்பாண்டில் மூன்று பிரிவுகளில் சுமார் 400 பங்கேற்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாட் செயல் விளக்கம் (Pod Demonstration) : அணிகள் தங்களது ஹைப்பர்லூப் பாட் முன்மாதிரிகளைக் காட்சிப்படுத்த உள்ளன. அதிநவீன சோதனை டிராக்கில் மேம்பட்ட வேகம், நிலைத்தன்மை, பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை நிரூபிக்கும்.
ஹைப்பர்லூப் இன்னோக்வெஸ்ட் (Hyperloop InnoQuest) : ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சவால்களை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்ட சிந்தனையைத் தூண்டக்கூடிய ஆய்வுக்களப் போட்டி அமையும்.
டிசைன்எக்ஸ் (DesignX) : ஹைப்பர்லூப் தொழில்நுட்பம், அதன் பயன்பாடுகளின் எல்லைகள் அனைத்தையும் கடந்து புதுமையான கருத்துகள்- யோசனைகளை முன்வைக்க வடிவமைப்பு ஆர்வலர்களுக்கான தளமாக இருக்கும்.
புதுமையான கருத்துகள், கனவுகள், மாற்றங்களை ஏற்படுத்துவோரை சிறப்புவாய்ந்த நிகழ்வில் பங்கேற்க வருமாறு ‘உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டி 2025’ (Global Hyperloop Competition 2025) அழைப்பு விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT