Published : 27 Jan 2025 06:12 AM
Last Updated : 27 Jan 2025 06:12 AM
சென்னை: பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் பிப்.3-ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வு தற்போது பிப்.8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு கடந்த டிச.14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வு எழுத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் மாநிலம் முழுவதும் டிசம்பர் 2-வது வாரம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் இத்தேர்வு பிப்.1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரகத் திறனாய்வு தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து துறையின் இயக்குநர் என்.லதா வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் சாரணர் இயக்குநரகத்தின் வைரவிழா திருச்சியில் ஜன.28 முதல் பிப்.3-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளதையொட்டி பிப்.1-ம் தேதி நடைபெறவிருந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வானது தள்ளிவைக்கப்படுகிறது. இந்த தேர்வு பிப்.8-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதுசார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT