Published : 25 Jan 2025 04:52 PM
Last Updated : 25 Jan 2025 04:52 PM

திறனறி தேர்வு போர்வையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் விவரம் திரட்டும் கல்வி நிறுவனங்கள்!

திருவாரூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட திறனறி தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில், தனியார் கல்வி நிறுவனங்கள் திறனறித் தேர்வு நடத்துவதாகக் கூறி அணுகி வருகின்றன. இதன்மூலம், பள்ளி மாணவர்களின் விவரங்கள் எளிதாக திரட்டப்பட்டு, வெளியில் செல்வதாக பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளும் பாடத்திட்டங்களை நடத்தி முடித்துவிட்டு, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியபடி திருப்புதல் தேர்வை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மாணவர்களை ஊக்கப்படுத்தவும், பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் வகையிலும்,திறனறித் தேர்வு நடத்துவதாகவும், அந்தத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குவதாகவும் கூறி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வு நடத்த அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நேரடியாக தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் அணுகி வருகின்றன. அந்த தேர்வுக்கான வினாத்தாளின் முதல்பக்கத்தில் மாணவர்களின் முழு விவரங்களையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்களை எளிதாக தெரிந்து கொண்டு, பொதுத் தேர்வு முடிவுக்குப் பின் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனங்களில் சேர்க்க வசதியாக இதை செய்வதாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விசாரித்தபோது, "இதுபோன்று திறனறித் தேர்வு நடத்த எந்த ஒரு தனியார் கல்வி நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. திறனறித் தேர்வு நடத்துவதாக தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை அணுகினால், தலைமை ஆசிரியர்கள் அதை அனுமதிக்கக் கூடாது என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்" என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x