Published : 24 Jan 2025 06:15 AM
Last Updated : 24 Jan 2025 06:15 AM

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு

சென்னை: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளிகளில் தேசிய விழிப்புணர்வு செயல்பாடுகளை முன்னெடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜன.24-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, உடல்நலன் சார்ந்து சில விழிப்புணர்வு செயல்பாடுகளை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திட வேண்டும்.

இதுதவிர பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது ஏதேனும் குழு பொறுப்பு ஆசிரியர் மாணவர் மனசு திட்டம் சார்ந்த விளக்க உரையை காலை வணக்க கூட்டத்தில் ஆற்ற வேண்டும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும்.

இந்த கூட்டத்தில் மாணவர் மனசு பெட்டியில் பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை விவாதிக்க வேண்டும். மேலும், மாணவர்கள் இணையதளத்தில் உள்ள தகவல்களை பாதுகாப்பாக எவ்வாறு கையாள்வது, இணையதள பாலியல் வன்முறைகளை தவிர்ப்பது சார்ந்து மகிழ் முற்றம் செயல்பாடாக குழு வாரியாக விவாதம் நடத்த வேண்டும்.

அதேபோல், அரசின் நலத்திட்டங்கள், பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள் மற்றும் மேற்படிப்பு சார்ந்த விவரங்கள், வளரிளம் பருவத்துக்கான மனநிலை சார்ந்த அறிவுரைகள், தேர்வுக்காக தயார்ப்படுத்துதல், தேர்வை எதிர்கொள்வது மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்குதல் போன்ற தகவல்களை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழுவில் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதுசார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட விவரங்களை வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பள்ளிகள் அறிக்கையாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x