Published : 18 Jan 2025 08:18 PM
Last Updated : 18 Jan 2025 08:18 PM
நெல்லை: தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 95 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவ, மாணவிகளும், 5 ஆசிரியர்களும் 2 நாள் கல்விச் சுற்றுலாவாக சென்னைக்கு சென்றனர். இவர்கள் இன்று மதுரைக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்றனர்.
சென்னையில் பிர்லா கோளரங்கம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், சென்னை உயர் நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, நாளை இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி திரும்புகின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் மைக்கேல் ராஜ். இவர், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுடன், பாண்டியாபுரம் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.10 லட்சம் விருது தொகை பெற்றுத் தந்தவர் ஆவார்.
மாணவ, மாணவிகளின் விமான பயணம் குறித்து தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் கூறும்போது, “கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விமான பயணம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத புதிய அனுபவத்தை ஏற்படுத்தி தரும். இதற்கு துபாய் நாட்டில் ஆன்டைம் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள், நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவி செய்தனர். இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்களது கல்விக்கு உந்து சக்தியாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT