Published : 16 Jan 2025 03:57 AM
Last Updated : 16 Jan 2025 03:57 AM

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பயன்படுத்த உத்தரவு

அரசுப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி என்ற செயலி வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் செல்போன், மடிக்கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போர்டு, கணினி ஆய்வகத்தில் மணற்கேணி செயலி அல்லது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதளத்தில் காணொலிக் காட்சிகளை பதிவிறக்கம் செய்து வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்துவதை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதுதவிர அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கணினியுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் பிப்ரவரி முதல் நடைபெற வேண்டும். மணற்கேணி செயலி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ள காணொலிகள் வகுப்பறை செயல்பாட்டில் தொடர்புடைய பாடங்களுக்காக பயன்படுத்தப்படுவதை முதல்நிலை கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ள வட்டாரக் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x