Published : 11 Jan 2025 06:42 AM
Last Updated : 11 Jan 2025 06:42 AM
சென்னை: தமிழகத்தில் நூற்றாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகளில் சிறப்பாக விழா நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்து மக்களின் நம்பிக்கைக்கு உரியவையாகத் திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டைக் கொண்டாடுவதன் வாயிலாக, பெற்றோருக்கும், மக்களுக்கும் அரசுப் பள்ளிகள் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். அதேபோல, மாணவர்களுக்கு உத்வேகமும், ஆசிரியர்களுக்கு உந்துதலும் ஏற்படும்.
மேலும், இவ்விழா பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும், உட்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு போன்ற தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும்.
மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் 22-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. வரும் 23-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை, ஆண்டு விழாவோடு இணைத்துக் கொண்டாடுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT