Published : 08 Jan 2025 12:59 AM
Last Updated : 08 Jan 2025 12:59 AM
கோவை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 7 மாதங்கள் கடந்தும் சீருடை வழங்காமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் விலை கொடுத்து சீருடை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில பாடத்திட்டத்தின்கீழ் 37 ஆயிரத்து 576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசசீருடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனிடம் இருந்து துணியைப் பெற்று சமூக நலத்துறை அங்கீகரித்த சொசைட்டிக்கு வழங்கி சீருடை தைத்து வழங்கப்பட்டு வருகிறது.இந்த கல்வியாண்டில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் தொடக்க நிலையான 1-ம் வகுப்பு தவிர மீதமுள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்புக்கு மட்டும் 7 மாதங்களாகியும் சீருடை வழங்காமல் தாமதமாகி உள்ளதாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக நலத்துறை சார்பில் சீருடை வழங்குவது தாமதமான காரணத்தால் அருகில் உள்ள துணிக்கடைகளில் ரூ.200 முதல் ரூ.400 வரை ரெடிமேட் சீருடைகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் பள்ளியில் சேரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் சீருடை அளவு ஏற்கெனவே படித்த மாணவர்களின் அளவை வைத்து வழங்கப்பட்டு வந்தது.
தற்போது முதல் வகுப்பு மாணவர்களிடம் அளவு எடுத்து சீருடை வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரஸ்வதி பூஜை வரை நடைபெற்றது. அதன் பின்னர் முதல் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எண் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் விவரங்கள் பெற நவம்பர் மாதமாகிவிட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச, வேட்டி சேலை வழங்குவதில் மும்முரமாகிவிட்ட நிலையில், தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனிடம் இருந்து துணி வாங்குவதில் தாமதம் நிலவுகிறது. தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், சமூக நலத்துறைக்கு சீருடைக்கான துணியை வழங்கிவிட்டால் சொசைட்டி மூலம் 15 நாட்களுக்குள் தைத்து வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகளை ஜனவரி 25-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்கும் வகையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் அளவு செய்யும் பணியை சமூக நலத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் வரைக்கும், மாநில அளவில் சுமார் 2.83 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சீருடைவழங்க வேண்டி உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT