Published : 23 Dec 2024 03:58 PM
Last Updated : 23 Dec 2024 03:58 PM
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேல்நிலை வகுப்பு பாடங்கள் எளிமையாகவே இருந்து வந்தன. நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சமீப காலமாக மேல்நிலை வகுப்புகளின் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் பாட நூல்களில் கடினமான பாடப் பகுதிகள் சேர்க்கப்பட்டன. மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பயன் தரும் என்று கருதி இவ்வாறு செய்கின்றனர். எளிய முறையில் பாடங்களைப் படித்து, பிற தொழில்சார் கல்வி மற்றும் பிற உயர்கல்வியை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு இந்த பாட சேர்ப்பு கடினமாகி விடுகிறது.
அறிவியல் சார்ந்த பாடங்களை போதிக்க போதிய தரமான ஆசிரியர் இல்லாத பள்ளிகள் இன்னமும் இருக்கின்றன. இங்கு பயிலும் நகர்ப்புற மாணவர்கள் தனிப்பயிற்சி மையங்களில் பணம் கட்டி படித்து விடுகின்றனர். மெல்லக் கற்கும் எளிய கிராமப்புற மாணவர்களுக்கு அவ்வாறான வாய்ப்பு கிடைப்பதில்லை. இவர்களுக்கு இந்தப் பாடத் திட்டம் பெரும் சவாலாகவே உள்ளது.
இவ்வாறாக மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் பாடங்கள் கடினமாக மாறியிருக்கும் சூழலில், படிப்படியாக கலை சார்ந்த பாட நூல்களிலும் கடினமான பாடங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பாடபிரிவுகளின் நிலைமையும் சிக்கலாகி வருகிறது. ஊரகப் பகுதிகளில் வணிகவியல் சார்ந்த படிப்புகளை படிப்புவர்களும் பாடச்சுமையால் திணறி வருகின்றனர்.
இந்தச் சூழலில், 10-ம் வகுப்பு வரையில் மெல்லக் கற்கும் மாணவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை மருத்துவம் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்க்க வேண்டும் என்ற அதீத ஆர்வத்தால் மேல்நிலை வகுப்பில் அறிவியல் பிரிவுகளில் சேர்த்து திணற அடிக்கின்றனர். ஒவ்வொரு பாடத்திற்கும் 500-க்கும் மேற்பட்ட பக்கங்களைப் படித்து, தேர்வுக்கான 70 மதிப்பெண்களில் தேர்ச்சி பெற தேவையான 15 மதிப்பெண்களை பெறுவதே இயலாத நிலை உருவாகிறது. இதனால் தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழந்த மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டு ஒரு சிலர் கூலி வேலைக்கு செல்வதும், வேலையற்று இருப்பதும் என ஒருவித இறுக்கமான சூழலை எதிர்கொள்கின்றனர்.
இதெற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு என்ன என்று யோசிக்கும் வேளையில், இது குறித்து கருத்து தெரிவித்த வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், “மருத்துவம், பொறியியல் பாடங்களில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் மேல்நிலைப் பிரிவில் அனைத்துப் பாடங்களையும் படிக்கலாம். குறைந்த பட்ச தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் மூன்றாண்டு பட்டப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எளிய பாடப்பகுதிகளில் இருந்து பாட வல்லுநர்கள் மூலம் குறைந்த பட்ச தேர்ச்சிக்குத் தேவையான வினா, விடைகளை மட்டும் தொகுத்து அச்சிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும். இதன் மூலம் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று உயர்கல்வி தொடர வழி வகுக்கும்.
கல்லூரி சென்ற பிறகு அவர்களுக்கான முதிர்ச்சி வந்து, கல்வி சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு போட்டித் தேர்வுகள் மூலம் பல்வேறு பணிகளில் சேர்ந்து இவர்கள் முன்னேறி விடுவார்கள். இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவது போலவே மாணவர்களின் நலன் கருதி குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை உடனடியாக வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கிறார். பயனுள்ள யோசனை இது; பள்ளிக் கல்வித் துறை இதை அறிவியல் மற்றும் வணிகவியல் என இரு பாடப்பிரிவுகளுக்கும் நடைமுறைப்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT