Published : 10 Dec 2024 07:08 AM
Last Updated : 10 Dec 2024 07:08 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கல்விச் சுற்றுலாவாக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல மாணவ, மாணவிகள் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி, கல்வித் துறை மற்றும் மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து 'விங்ஸ் ஆஃப் பிளை' திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டுமுதல் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன்படி, 2016-ல் மலேசியாவுக்கும், 2017-ல் ஜெர்மனிக்கும், 2018-ல் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கும், 2019-ல் சிங்கப்பூருக்கும், 2022-ல் லண்டன் மாநகருக்கும், 2023-ம் ஆண்டு துபாய்க்கும், இந்த ஆண்டு நெதர்லாந்துக்கும் கல்விச் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
கரோனா பரவல் காலமான 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றவர்களை, வெளிநாடு அழைத்துச் செல்ல இயலாத காரணத்தால், அவர்களின் சாதனையைப் பாராட்டி மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 2024-25 கல்வியாண்டில் விங்ஸ் ஆஃப் பிளை திட்டத்தின் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் `தொழில் முனைவோர் திறன் மேம்பாடு' என்ற தலைப்பில் 3 நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் சுற்றில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 211 மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இறுதிச் சுற்றுக்கான போட்டிகளில் பங்கேற்றனர்.
அதில் தேர்வு பெற்ற 8 மாணவ, மாணவிகள் அடுத்த ஆண்டு மே மாதம் கல்விச் சுற்றுலாவாக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அங்கு பல்வேறு தொழிற்சாலைகளைப் பார்வையிட உள்ளனர். இது அவர்கள் வருங்காலத்தில் தொழில்முனைவோராக ஆவதற்கான உத்வேகத்தை கொடுக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT