Published : 10 Dec 2024 06:04 AM
Last Updated : 10 Dec 2024 06:04 AM
சென்னை: ரஷ்யாவின் சவுத்வெஸ்ட் மாநில பல்கலைக்கழகம், சென்னை ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் சார்பில் ‘ரோபோடிக்ஸ் மற்றும் புதுமையான கல்விதொழில்நுட்பங்கள்’ குறித்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. ரஷ்ய துணைத் தூதர் வலேரி கோட்சேவ் தொடங்கி வைத்தார். உதவி துணைத் தூதர் அலெக்சாண்டர் டோடோனோவ் உடனிருந்தார். 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த விளக்கக் காட்சிகள், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்த விரிவுரைகள், பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன. இதில் ரஷ்யாவின் சவுத்வெஸ்ட் மாநில பல்கலைக்கழகம், பெல்கோரோட் மாநில பல்கலைக்கழகம், அணு இயற்பியல் தொடர்பான ஸ்கோபெல்ட்சின் கல்வி நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த 7 கல்வியாளர்கள் பங்கேற்று நவீனரோபோக்களை எப்படி உருவாக்குவது, ரஷ்யாவில் ரோபோடிக்ஸ் கல்வியைத் தொடர கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
முன்னதாக நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, ரஷ்ய துணைதூதர் வலேரி கோட்சேவ் பேசியதாவது: ரஷ்ய அரசு தொடர்ந்து அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. நவீன தொழில்நுட்பங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இதையொட்டி உலகளாவிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து பொறியியல் தொடர்பான கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகிறோம். அதில் ஒன்றாக, அறிவியல் துறையிலும், பொறியியல் கல்விகளிலும் சிறந்து விளங்கும் தமிழகத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து கூட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்துவதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT