Published : 08 Dec 2024 07:08 AM
Last Updated : 08 Dec 2024 07:08 AM
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு அடுத்தாண்டு மே 18-ம் தேதி நடைபெற உள்ளதாக கான்பூர் ஐஐடி அறிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்வை நடத்தவுள்ள கான்பூர் ஐஐடி தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி பிரதானத் தேர்வு 2 தாள்களாக தலா 3 மணி நேரம் நடைபெறும். இவ்விரு தேர்வுகளையும் தேர்வர் எழுத வேண்டியது கட்டாயமாகும். முதல் தாள் காலை 9 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையும் நடத்தப்படும். ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பிரதானத் தேர்வை எழுத முடியும். இந்த பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி.களில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும். மேலும், கூடுதல் விவரங்களை https://jeeadv.ac.in/ என்ற வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு வரும் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT