Published : 07 Dec 2024 06:25 AM
Last Updated : 07 Dec 2024 06:25 AM

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி ஒரே நேரத்தில் 2 பட்ட படிப்பு படிக்க யுஜிசி வரைவு நெறிமுறைகள்

சென்னை: ஒரே நேரத்​தில் 2 பட்டப் படிப்புகள் படிப்​பது, பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை படித்​தாலும், விரும்பிய பட்டப் படிப்​பில் சேருவது என்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டு நெறி​முறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இளங்​கலை, முதுகலை படிப்பு​களில் மாணவர் சேர்க்கைக்கு பின்​பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டு நெறி​முறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறப்​பட்​டுள்ள​தாவது: ஜூலை/ஆகஸ்ட் மற்றும் ஜனவரி/பிப்​ரவரி என ஆண்டுக்கு 2 முறை உயர்​கல்வி நிறு​வனங்கள் மாணவர் சேர்க்கை நடத்​தலாம். உள்கட்​டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த படிப்பு​களில் சேர்க்​கப்​படும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்​கல்வி நிறு​வனமே முடிவு செய்​ய​லாம்.

உயர்​கல்வி, தொழிற்​கல்வி, பயிற்சி, திறன் மேம்​பாடு, இன்டர்ன்​ஷிப் ஆகிய அனைத்​தை​யும் ஒட்டுமொத்த பாடத் திட்​டத்​துடன் இணைத்​துக் கொள்​ளலாம். மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்​த​வும், விரும்​பினால் தொடரவும் வாய்ப்பு வழங்​கப்பட வேண்டும்.

இளங்கலை பட்டப்​படிப்பு அல்லது ஒருங்​கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்​பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்​டும். பிளஸ் 2-வில் அறிவியல், கணிதம், வணிக​வியல் என எந்த பாடப் பிரிவை தேர்வு செய்திருந்​தா​லும், விரும்பிய இளங்கலை பட்டப் படிப்​பில் சேரலாம்.

இதற்​காக, தேசிய அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்​தப்​படும் நுழைவு தேர்​வில் தேர்ச்சி பெற்​றால் போதும். உயர்​கல்வி நிறு​வனங்​களில் போதிய கல்வி, அடிப்படை வசதி இருந்​தால், இளங்​கலை, முதுகலை படிப்​பில் குறிப்​பிட்ட எண்ணிக்கை​யில் மாணவர்களை நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்த்​துக் கொள்​ளலாம்.

இளங்​கலை​யில் ஒரே நேரத்​தில் 2 பட்டப் படிப்பு​களை​யும் முதுகலை​யில் 2 படிப்பு​களை​யும் படிக்​கலாம். மாணவர்​களின் குறைந்​த​பட்ச வருகை பதிவு தேவையை தன்னாட்சி அமைப்பு​களின் ஒப்பு​தலுடன் உயர்​கல்வி நிறு​வனங்கள் முடிவு செய்​ய​லாம். இளங்கலை பட்டப் படிப்​பின் காலம் 3 அல்லது 4 ஆண்டு​களாக​வும், முதுகலை படிப்​பின் காலம் 1 அல்லது 2 ஆண்டு​களாக இருக்​கும். 4 ஆண்டு கால இளங்கலை படிப்பை முடிப்​பவர்கள் ஓராண்டு முதுகலை படிப்​பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மேற்​கண்ட அனைத்து அம்சங்​களும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்​கை​யில் உள்ளன. தமிழகத்​தில் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்​படுத்​தப்​பட​வில்லை. மாநில நடைமுறைப்​படி, உயர்​கல்வி நிறு​வனங்​களில் ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது ஜுன் மாதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், இளங்கலை படிப்​பின் காலம் 3 ஆண்​டு​கள் மட்டுமே. அதே​போல,பிளஸ் 2-​வில் படிக்​கும் பாடப்பிரிவுக்கு ஏற்​பவே, பட்டப் படிப்​பை தேர்வு செய்ய ​முடி​யும் என்பது குறிப்பிடத்தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x