Published : 01 Jul 2024 06:24 AM
Last Updated : 01 Jul 2024 06:24 AM

தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, மாம்பழப்பட்டு, ஒட்டன்காடுவெட்டி கிராமங்களில் நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பிரச்சாரம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளதே என்று கேட்கிறீர்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்தேர்வெழுதி 2,222 பேர் சான்றிதழ்சரிபார்ப்புக்காக காத்திருக்கிறார்கள். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் காலி் பணியிடங்கள் நிரப்பப்படும். அரசுப்பள்ளிகளில் தற்போது பணி நிரவல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் பணிபுரியும் ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிக்கு பணிநிரவல் செய்யும் பணி நடைபெறுகிறது.

வழக்கமாக ஆகஸ்ட் 1-ம் தேதிதான் அரசுப் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர், எத்தனை ஆசிரியர்கள்தேவை என்று கணக்கெடுப்பு நடத்தப்படும்.பேராசிரியர் பள்ளிமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,கூடுதல் பள்ளிக் கட்டிடங்களுக்காக ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 18,000 வகுப்பறைகளை கட்ட திட்டமிட்டுள்ளோம்.

இந்த நிதியாண்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.3,497 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3,604 கூடுதல் வகுப்பறைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,500வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல, ரூ.1,000 கோடியில், 4,729 வகுப்பறைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்தால், ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவு பெற்ற பள்ளியாகத் திகழும். இதுதவிர, 453 பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதற்கான ஆய்வகங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x