Published : 24 Jun 2024 06:59 PM
Last Updated : 24 Jun 2024 06:59 PM

புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் இயக்கத்தை தொடங்கியது மத்திய கல்வி அமைச்சகம்

புதுடெல்லி: புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13.5 லட்சம் இறப்புகளுக்கு இது காரணமாகிறது. புகையிலை உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு 2019-ன் படி, நாடு முழுவதும் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் 8.5 சதவீதம் பேர் வெவ்வேறு வடிவங்களில் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.

நமது பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களைச் சுற்றி பல்வேறு வடிவங்களில் புகையிலைப் பொருட்கள் எளிதாக கிடைப்பது இந்த நிலைக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புகையிலை பயன்பாட்டிலிருந்து சிறார்களையும் இளைஞர்களையும் பாதுகாப்பதற்கான புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை பள்ளிகளுக்கான "புகையிலை இல்லா கல்வி நிறுவன செயல்பாட்டு கையேட்டை" உருவாக்கி, 2024 மே 31 அன்று, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் புகையிலை இல்லாத வழிகாட்டுதல்களுக்கு இணங்க புகையிலை இல்லாத பகுதியாக கல்வி நிறுவனங்களை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

"கல்வி நிலைய வளாகத்திற்குள் 'புகையிலை இல்லாத பகுதி' என்ற அறிவிப்புப் பலகையை காட்சிப்படுத்த வேண்டும். கல்வி நிறுவனத்தின் நுழைவாயில் / சுற்றுச்சுவரில் "புகையிலையற்ற கல்வி நிறுவனம்" என்ற அறிவிப்புப் பலகையை காட்சிப்படுத்த வேண்டும். பீடி, சிகரெட், குட்கா, புகையிலை போன்ற புகையிலை பயன்பாட்டிற்கான எந்த ஆதாரமும் வளாகத்திற்குள் இருக்கக்கூடாது. புகையிலையின் தீங்குகள் குறித்த சுவரொட்டிகள் மற்றும் பிற விழிப்புணர்வு பொருட்களை கல்வி நிறுவனங்களின் வளாகத்திற்குள் காட்சிப்படுத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது புகையிலை கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களின் நடத்தை விதிகளில் "புகையிலை பயன்படுத்தாமை" வழிகாட்டு நெறிமுறைகளை சேர்க்க வேண்டும். கல்வி நிறுவனத்திலிருந்து 100 அடிக்குள் உள்ள கடைகளில் எந்தவிதமான புகையிலைப் பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது" ஆகிய முக்கிய வழிகாட்டுதல்கள் கல்வி அமைச்சகத்தின் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x