Published : 24 Apr 2018 10:28 AM
Last Updated : 24 Apr 2018 10:28 AM

படிப்போம் பகிர்வோம்: நம் காலத்துக்கான நீதி போதனை

உலகப் புத்தக நாள் : ஏப்ரல் 23

‘அறம் செய்ய விரும்பு’ என்று நெடுங்காலமாகப் போதித்துவருகின்றன நம் கல்விக்கூடங்கள். அவை எப்போது, எப்படி அறம் செய்யப் பழகப் பயிற்றுவிக்கப்போகின்றன என்ற கேள்வியை கல்விக்கூடங்களுக்குள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல சம்பவங்கள் எழுப்புகின்றன. மாணவர்-ஆசிரியர் உறவிலும், சக மாணவர்களுடனான உறவிலும் எழும் சிக்கல்கள் அறநெறி கல்விக்கான உடனடி தேவையை உணர்த்துகின்றன.

ஆனால், பிரச்சினை எழும்போது மட்டும் கூடி விவாதிப்பதும் பிறகு கலைந்துபோவதுமாகவே இத்தகைய சிக்கல்கள் அணுகப்படுகின்றன. இத்தகைய போக்கை மாற்றவும், மாணவர்களின் பணித் திறன்களை வளர்த்தெடுக்கும் அதேநேரத்தில் வாழ்க்கைத் திறன்களையும் மேம்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸின் ‘Living in Harmony: A Course on Values Education and Life Skills’ என்ற புத்தகத் தொகுப்பு.

மாணவர்களுக்கு வாழும் கலையைக் கற்பிப்பது, மனித மாண்புகளை வளர்ப்பது ஆகியவைதான் இப்புத்தகத் தொகுப்பின் இலக்கு என்கிறது இதன் முன்னுரை. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலான மாணவர்கள் அந்தந்த வயதுக்கு ஏற்ப ரசித்து, பங்கேற்று, தேர்வு பயம் இன்றி, அலுப்பில்லாமல் படிக்கும் வகையில் இதில் அத்தியாயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

பன்மைத்தன்மையைக் கொண்டாடும் மனப்பான்மை

ஏற்கெனவே நீதிக்கதைகளுக்கும் போதனைகளுக்கும் நம் சமூகத்தில் பஞ்சமில்லை. பிறகு இப்புத்தகத்துக்கான அவசியம் என்ன? சமய சார்பின்றி அறநெறிகளைச் செயல்முறை வடிவில் கற்பிக்கும் மாதிரியை இப்புத்தகத் தொகுப்பு முன்வைக்கிறது.

உதாரணத்துக்கு, ‘உன் தேசத்தை நேசி’ என்ற அத்தியாயத்தில் பல சமயப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் சித்திரங்களோடு அவர்களைப் பற்றிய எளிய குறிப்புகள், குட்டி கேள்வி-பதில்கள், பலவகைப்பட்ட முகங்களில் வண்ணம் தீட்டும் பகுதி ஆகியவை ஒன்றாம் வகுப்புப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே கருத்தாக்கம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ‘ஒரே நாடு பல உலகங்கள்’ என்ற தலைப்பில் கல்வி உரிமைச் சட்டம் முதற்கொண்டு, சாதிய ஒழிப்பு சிந்தனை, விளிம்பு நிலை மக்களின் துயரங்கள்வரை கவிதை, குறுங்கட்டுரை, விவாதப் புள்ளிகள் வழியாகக் கடத்தப்படுகின்றன. பன்மைத்தன்மையைக் கொண்டாடும் மனப்பான்மையை இளம்பிராயத்தில் இருந்தே பதியம் போடும் விதமாக ஒவ்வொரு வகுப்புக்கு ஏற்றாற்போல இந்தக் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

போதனைகள் போதும்!

மாணவர்கள் மனதில் பதியப்பட வேண்டியவை எனத் தீண்டாமை ஒழிப்பு, தனிமனித மாண்பு, ஒத்துழைப்பு, சமத்துவம், நட்பு பாராட்டுதல், விட்டுக்கொடுத்தல், சுதந்திர உணர்வு, உடலுழைப்புக்கு மரியாதை, கருணை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, சமூகநீதி, சுயமரியாதை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட 84 மதிப்பீடுகள் இப்புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை மனப்பாடப் பகுதிகளாகத் திணிக்காமல் கதைகள், கவிதைகள், வாழ்க்கைச் சம்பவங்கள், விளையாட்டுகள், புதிர்கள், கேள்வி-பதில் பகுதிகள், கைவினைப் பயிற்சிகள், மாணவர்கள் தனித்தும் குழுவாகவும் சோதித்துக் கற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்கள் போன்ற வழிமுறைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக, செயல்கள், செயல்பாடுகளின் மூலமாக மாணவர்களுக்கு நெறிகளைப் பயிற்றுவிக்கும் பாடத்திட்டம் இதில் வகுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு ‘அகிம்சை வழியைக் கடைப்பிடித்தல் நன்று’ என்ற விழுமியத்தைத் தனிமனிதர்களுக்குப் போதித்தால் சமூகத்தில் நடைமுறைப்படுத்திவிடலாம் என்பது நம்பிக்கை.

ஆனால், சமூக வெளியில் அகிம்சைக்கு மரியாதை இருந்தால் மட்டுமே ஒருவரால் அதைக் கடைப்பிடிக்கத் தோன்றும் இல்லையா? ஆக, அகிம்சைக்கான அவசியம் செயல்வழியில் நிரூபிக்கப்பட வேண்டும். நம்மிடம் மற்றவர்கள் வன்முறையைப் பிரயோகிக்கும்பட்சத்திலும் நாம் அன்பின் வழி செல்ல வேண்டும் என்பதை உணர்த்த ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை இதற்கான அத்தியாயங்கள் புதிய கோணங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

21CH_LivinginHarmonyபாகுபாட்டைக் களைய

ஆண்-பெண் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும், சமத்துவத்தைப் பயிற்றுவிப்பதும் கல்வி நிறுவனங்களின் பொறுப்பு. இதை உணர்ந்து, அமைதிக்கான கல்வியை அளிக்கும் நோக்கில் 2004-ல் வடிவமைக்கப்பட்ட இப்புத்தகத் தொகுப்பில் 2013-ல் பாலின விழிப்புணர்வு, குழந்தைகள் பாதுகாப்புக் குறித்த பகுதிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 2018-ம் ஆண்டுக்கான மறுபதிப்பில் நுணுக்கமான சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

பதின்பருவத்தில் திடீரென்று ஆண்-பெண் சமத்துவத்தைப் போதிக்கும்போது அங்கு ஒவ்வாமை எதிரொலிக்கக்கூடும் என்பதால் துளிர் பருவத்திலிருந்தே ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மையை இப்புத்தகம் வளர்க்க முயல்கிறது. இரண்டாம் வகுப்புக்கான இந்த அத்தியாயத்தில், ‘சிறுவர்களும் சிறுமிகளும் ஒருவரில் இருந்து இன்னொருவர் வித்தியாசமானவர்கள்.

ஆனால் இருவருமே சொப்புசாமான் வைத்துச் சமைத்தல், கார் பொம்மை ஓட்டி விளையாடுதல் போன்ற எல்லா விளையாட்டுகளையும் விளையாடலாம்’ என்று விளக்கப்படங்களுடன் எழுதப்பட்டிருக்கிறது.

ஐந்தாம் வகுப்புக்கு வரும்போது, ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் இடையில் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகள் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. எட்டாம், ஒன்பது, பத்தாம் வகுப்புகளில், ’இந்தியாவின் தொலைந்த மகள்கள்’, ‘X மற்றும் Y சமன்பாடு’, ‘பால் வேறுபாடு’ ஆகிய தலைப்புகளின் கீழ் ஆண்-பெண் குறித்த தீவிரமான சிக்கல்கள் மாணவ-மாணவிகளின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அலசி ஆராயப்பட்டிக்கின்றன.

வாழ்க்கைத் திறன்கள் தேவை

தொடர்பாற்றல், நேர மேலாண்மை, முடிவெடுக்கும் திறன், தலைமைப் பண்பு போன்றவை அறத்துடன் கூடியவையாக இருக்க வேண்டும் என்பதை இப்புத்தகத் தொகுப்பு விவாதிக்கிறது. வேலைக்குத் தங்களைத் தகுதி படைத்தவர்களாக மாற்றிக்கொள்ள மாணவர்களுக்கு மென்திறன்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் காட்டும் தீவிரத்தை இத்தகைய வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதிலும் நம்முடைய கல்வித் துறை காட்ட வேண்டும் என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது.

அதிலும் ஏதோ வகுப்புப்பாடமாக அல்லாமல் ஒட்டுமொத்தக் கல்வியிலும் அறநெறிச் சிந்தனைகள் செயல்வழி கல்வி முறையில் கொண்டுசெல்லப்பட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே புதிய தலைமுறையினர் அறிவுத் திறன்களில் மட்டுமின்றி உணர்வுத் திறன், சிந்தனைத் திறன், சமூகத் திறன் உள்ளிட்ட அனைத்து வாழ்க்கைத் திறன்களையும் பெற்று நல்ல மனிதர்களாக வாழ முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x