Published : 04 May 2024 05:33 AM
Last Updated : 04 May 2024 05:33 AM

தமிழகம் முழுவதும் 11,113 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி தயார்: பள்ளிக்கல்வித் துறை

கோப்புப்படம்

சென்னை: தமிழகம் முழுவதும் 11,113 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள பள்ளிகளில் விரைவில் இவ்வசதி செய்து தரப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 24,291 தொடக்கப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு ஆசிரியர்களுக்கு டேப்லெட் எனப்படும் கையடக்க கணினியும் வழங்கப்பட இருக்கிறது.

உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஆசிரியர்களுக்கான கையடக்க கணினி பயன்பாடுகளுக்கு இணைய வசதி அவசியம் வேண்டும். ஆனால், எல்லா அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதிகள் இல்லை.

இதன் காரணமாக, இணைய வசதி இல்லாத பள்ளிகளில் அவ்வசதியைச் செய்து தருவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது, அனைத்து அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி இயங்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மே 2-ம் தேதி நிலவரப்படி, 8030 அரசு தொடக்கப் பள்ளிகள், 3083 அரசு நடுநிலைப் பள்ளிகள் என 11,113 அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

எஞ்சியுள்ள அரசு தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் திறக்கப்படும்போது அரசுப் பள்ளிகளில்100 சதவீதம் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுவிடும் என்று பள்ளிக்கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x