Published : 10 Apr 2023 04:28 AM
Last Updated : 10 Apr 2023 04:28 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் முழு ரயிலையும் எரிக்க ஷாரூக் ஷபி சதி திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட உள்ளது.
கடந்த 2-ம் தேதி கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் டி-1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
தப்பிய நபர் மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் கடந்த 4-ம் தேதி பிடிபட்டார். பின்னர் அவர் கேரள போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கேரள போலீஸார் அவரை கோழிக்கோட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கேரள போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது. ரயிலுக்கு தீ வைத்த ஷாரூக் ஷபி (24), டெல்லி ஷாகின் பாக் பகுதியை சேர்ந்தவர். தச்சு தொழிலாளியாக இருந்த அவர், யூ-டியூப் சேனல் தொடங்கி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 31-ம் தேதி டெல்லியில் இருந்து சம்பர்க் கிராந்திரயில் மூலம் கேரளாவின் சோரனூர் வந்துள்ளார். கடந்த 2-ம் தேதி அங்குள்ள பங்க்கில் இருந்து 3 பாட்டில்களில் 4 லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு, சோரனூர் ரயில் நிலையத்துக்குவந்து இரவு 7.19 மணிக்கு ரயிலில் ஏறியுள்ளார். இரவு 9.30 மணி ஆற்றுப் பாலத்தின் மீது ரயில் சென்றபோது பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். ஒட்டுமொத்த ரயிலையும் எரிக்கவே ஷாரூக் ஷபி சதி திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் போதியபயிற்சி இல்லாததால் அவரால் செயல்படுத்த முடியவில்லை.
குமரியில் தாக்குதலுக்கு திட்டமா?
அவரது டைரியில் திருவனந்தபுரம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களின் பெயர்கள் உள்ளன. இந்த நகரங்களிலும் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். இவ்வாறு கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கூறும்போது, “இது நிச்சயமாக தனிநபர் தாக்குதல் இல்லை. பல்வேறு மாநிலங்கள் தொடர்புடைய வழக்கு. பல தீவிரவாத அமைப்புகளுடன் ஷாரூக் ஷபிக்கு தொடர்பு உள்ளது. எனவே, வழக்கு விரைவில் என்ஐஏ-க்கு மாறும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT