Published : 14 Oct 2022 05:20 AM
Last Updated : 14 Oct 2022 05:20 AM

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி படுகொலை - இளைஞரைப் பிடிக்க 7 தனிப்படைகள்

சத்யா

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி படுகொலை செய்துவிட்டு சதீஷ் என்ற இளைஞர் தப்பி ஓடினார். அவரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்ஸி ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி(43) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இவர்களுக்கு சத்யா (20) என்ற மகள் உள்ளார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தயாளன் என்பவரும் ஆதம்பாக்கம் ராஜா தெருவில் வசித்து வந்தார். இவரது மகன் சதீஷ்(23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார்.

கருத்து வேறுபாடு

இந்நிலையில் சத்யாவும் சதீஷும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சிலமாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம் 1 மணியளவில் வந்த சத்யா, முதலாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் சென்று பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பயணிகள் அதிர்ச்சி

இந்நிலையில், ஆத்திரமடைந்த சதீஷ், தாம்பரத்தில் இருந்து நடைமேடைக்குள் வந்துகொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சத்யாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சத்யா, ரயில் சக்கரத்தில் சிக்கி, தலை துண்டித்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணநேரத்தில் நடந்துமுடிந்த இந்த கொடூர சம்பவத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் சதீஷை பிடிக்க முயன்றனர் ஆனால் அகப்படாமல் ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார், சத்யா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சதீஷை தேடிவருகின்றனர்.

மேலும், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரயில்வே போலீஸ் எஸ்.பி. உமா பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

தப்பியோடிய சதீஷைப் பிடிக்க ரயில்வே போலீஸ் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் கூறியதாவது:

மாப்பிள்ளை பார்க்கிறார்கள்

சத்யா, சதீஷ் இருவரும் கடந்த 6 மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, சதீஷ் சரியாக படிக்கவில்லை என்றும் விமான நிலைய கார்கோவில் வேலை செய்வதும் சத்யாவுக்கு தெரியவந்தது. இதனால், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், இவர்களின் காதல் குறித்து சத்யாவின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்களும் சத்யாவை கண்டித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சதீஷிடம், ‘‘இனிமேல் என்னிடம் பேச வேண்டாம், எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். எனவே, என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்’’ என்று சத்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கோபம் காரணமாகவே சத்யாவை அவர் கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x