Published : 12 Oct 2022 04:20 AM
Last Updated : 12 Oct 2022 04:20 AM

சேலத்தில் 3 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

சேலம்

சேலத்தில், தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 3 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டனர். சேலம் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் நிறுவனங்கள், நூற்பாலைகள், கோழிப்பண்ணைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினரால் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, 3 சிறுமிகள் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால் அவர்களை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகளை வேலைக்கு அமர்த்திய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர், குழந்தைத் தொழிலாளர் தடுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின்படி அபாயகரமான தொழில்களில் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பணியில் சேர்த்தது கண்டறியப்பட்டால் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x