Published : 09 Oct 2022 04:10 AM
Last Updated : 09 Oct 2022 04:10 AM
சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக காவல் துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள 845 கிலோ கஞ்சா மற்றும் கேட்டமைன் போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான 57 வழக்குகளில் 831 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கேட்டமைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை நீதிமன்ற உத்தரவின்படி, சிங்கப்பெருமாள்கோவில் அருகில் உள்ள தென்மேல்பாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னிலையில் போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 1 கோடியே 50 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சங்கர் ஜிவால் கூறியதாவது: 57 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 845 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டன. மேலும் 700 கிலோ போதை பொருட்கள் நீதிமன்ற உத்தவுக்கு பின் விரைவில் அழிக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 592 வழக்குகளில் 908 பேர் கைது செய்யப்பட்டு 1,526 கிலோ கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி 24 வழக்குகளில் 62 பேர் கைது செய்யப்பட்டு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம். இதுவரை ரூ.4.87 கோடி கஞ்சா, ரூ. 2 கோடியே 88 லட்சம் கேட்டமைன், ரூ.55 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய 350 பேரின் வங்கி கணக்குகள் இந்த ஆண்டில் முடக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவதுடன், அவர் வேறு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் தடையாக அமையும்.
சென்னையைப் பொறுத்தவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில் மற்றும் தரை மார்க்கமாக கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் ரயில் மூலம் கொண்டு வருவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இவை மேலும் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், வடக்கு மண்டலஇணை ஆணையாளர் ஆர்.வி.ரம்யா பாரதி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ஜி.நாகஜோதி மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குநர் ஏ.விசாலாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் கடந்த ஜூன் 25 அன்று 68 வழக்குகளில் பறிமுதலான ரூ.2 கோடி மதிப்புள்ள 1,300 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் ஆகிய போதை பொருட்கள் நீதிமன்றங்கள் உத்தரவுப்படி எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிரீன் தீபாவளி: இதனிடையே, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பசுமை பட்டாசுகள் குறித்த கிரீன் தீபாவளி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் பட்டாசு கழிவுகளை தனியாக பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்போடு இந்த கழிவுகள் கும்மிடிபூண்டி, திருச்சுழி பொது திடக்கழிவு மேலாண்மை மையங்களில் அழிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரை கொண்டு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கழிவு மேலாண்மை கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT