Published : 31 Aug 2022 04:40 AM
Last Updated : 31 Aug 2022 04:40 AM

ராஜபாளையத்தில் இரவில் நடக்கும் குற்ற செயல்கள்: போலீஸ் கண்காணிப்புக்கு மக்கள் வலியுறுத்தல்

ராஜபாளையம் வஉசி நகரில் முகமூடி கொள்ளையர்கள் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி உள்ளது.

ராஜபாளையம்

ராஜபாளையம் பகுதிகளில் இரவு நேரத்தில் நடக்கும் தொடர் குற்றச் சம்பவங்களால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். காவல்துறையினர் இரவு ரோந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் வஉசி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் கோயம்புத்தூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை பார்க்க ஆகஸ்ட் 24-ம் தேதி இருவரும் கோயம்புத்தூர் சென்றனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ராஜேந்திரன் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடி சென்றனர். மேலும் இதே தெருவில் உள்ள விஜயகுமார் என்பவரின் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

முகமூடி அணிந்த நபர்கள் நடந்து செல்லும் காட்சி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கடந்த மாதம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இரு நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் இரவில் 4 இளைஞர்கள் சேர்ந்து மக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டுவதும், வீடு, வாகனங்களை சேதப்படுத்துவது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. ராஜபாளையம் நகரில் நடக்கும் இரவுநேர குற்றச் சம்பவங்கள் மற்றும் குறிப்பாக வயதான தம்பதிகளை குறிவைத்து நடக்கும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதைத் தவிர்க்க ராஜபாளையம் நகரில் இரவுநேரக் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என காவல் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x