Published : 21 Aug 2022 04:05 AM
Last Updated : 21 Aug 2022 04:05 AM
ஜாபர்கான்பேட்டையில் நடந்த கோஷ்டிமோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கோபால். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிதுணைத் தலைவராக உள்ளார். இவருடைய மகன் பாலாஜி(25). சிவில் இன்ஜினீயர். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜாவும்(25) நெருங்கிய நண்பர்கள். இருவரும் அதிமுகவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
பாலாஜியின் தந்தை கோபால், கடந்த 2019-ம் ஆண்டு அன்னை சத்யா நகர் பகுதியைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். இது ராஜா தரப்புக்கு பிடிக்கவில்லை. இதனால் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ்(25), கேடி கேசவன்(21), பிரவீன்(21) உள்ளிட்டோருக்கும், பாலாஜி தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி அன்னை சத்யா நகர் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின்போதும் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, அவரது தம்பி பரத் மற்றும் அவர்களது தரப்பினர் நேற்று முன்தினம் பிரகாஷை கத்தியால் வெட்டினர். இதையடுத்து பிரகாஷ் தரப்பினர், ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் கோகுல்(19), மணிகண்டன்(21), பிரவீன், மணி, கேடிகேசவன், தண்டபாணி உட்பட 15-க்கும்மேற்பட்டோர் பாலாஜி வீட்டுக்கு ஆயுதங்களுடன் வந்து தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, பரத் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து அவர்கள் மீது வீசினார். இதில் பிரகாஷ் தரப்பினர் கோகுல், மணிகண்டன், பிரவீன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், பாலாஜி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தஜனேஸ்வரன்(20), சினிமா எலக்ட்டிரீசியன் கோபி(20) உட்பட 15 பேரை எம்.ஜி.ஆர்.நகர் போலீஸார் கைது செய்தனர்.
அதே போன்று ராஜா தரப்பில் மணிமட்டும் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார். மேலும் தலைமறைவாகி உள்ளவர்களை தேடிப் பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் எம்.ஜி.ஆர். நகர் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT