Published : 19 Aug 2022 04:40 AM
Last Updated : 19 Aug 2022 04:40 AM
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி, மகள், மகனை கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அலங்காநல்லூர் அருகில் உள்ள பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). விவசாயி. இவர் ஊமச்சிகுளம் அருகே தவசி புதூரில் உள்ள திமுக பிரமுகர் ஒருவரின் கொய்யாத் தோப்பு ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
கொய்யா தோப்பில் உள்ள வீட்டில் மனைவி சுரேகா(36), மகள் யோகிதா(16), மகன் மோகன்(11) ஆகியோருடன் வசித்து வந்தார். யோகிதா மதுரையில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். மோகன் பாலமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கொய்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் கழுத்தை அறுத்த நிலையில் முருகன் நேற்று காலை மயங்கிக் கிடந்தது போலீஸாருக்குத் தெரிய வந்தது. அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் உள்ளிட்ட போலீஸார், அலங்காநல்லூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
கிணற்றின் படியில் மயங்கிக் கிடந்த முருகனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கிணற்றில் பிணமாகக் கிடந்த சுரேகா, மகள், மகன் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணை தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸார் கூறியதாவது:
முருகன் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், கொய்யாத் தோப்பை குத்தகைக்கு எடுத்து கடனை அடைக்க முயன்றார். அதுவும் முடியவில்லை. கடன் பிரச்சினை அதிகரித்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி, மகள், மகனை கிணற்றுக்குள் தள்ளி விட்டுள்ளார். பின்னர் கத்தியால் தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார். நீச்சல் தெரிந்ததால் ஒருவழியாக கிணற்று படிக்கட்டில் ஏறிய நிலையில் அவர் மயங்கிக் கிடந்தார்.
இச்சம்பவத்துக்கு முன்னதாக ஊமச்சிகுளத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் மொபைல் போனில் முருகன் பேசி உள்ளார். அப்போது, கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் இறைவனிடம் செல்கிறோம். இறுதிச் சடங்குக்கு சிறிது பணம் வைத்திருக்கிறேன். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் என்றனர்.
இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT