Published : 19 Aug 2022 04:20 AM
Last Updated : 19 Aug 2022 04:20 AM
கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கல்லூரி சார்பில் நடைபெற்ற விசாரணையில், புகார் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை படித்த மாணவிஒருவர், தன்னுடைய பேராசிரியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மன ரீதியாகவும் பல்வேறு துன்புறுத்தல்கள் செய்ததாகவும் தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி முதல்வருக்கு தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கல்லூரி முதல்வர், இதற்காக தனி குழு அமைத்து விசாரணை நடத்தியதில், புகாருக்குள்ளான பேராசிரியர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, அதுதொடர்பான அறிக்கையை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுகந்தி கூறும்போது, “கடந்த ஜூன்மாதம் ஆங்கிலத் துறையில் முதுநிலை படித்த மாணவி ஒருவர்,அதே துறை பேராசிரியர் மீது முதல்வரின் தனிப் பிரிவில் பாலியல்வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, முறைப்படி பல்வேறு பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று விசாரணை நடத்தியது. இதில், புகாருக்கு உள்ளான பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு, கடந்த ஆக.3-ம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 வாரங்களுக்கு மேலாகியும், இதுவரை சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், கல்லூரியின் பெயரை காக்கும் வகையிலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரிடம் கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதாக தெரிவித்த அவர், தான் பட்டியலினத்தவர் என்பதாலும், அனுபவம் வாய்ந்த தனக்குபதவி உயர்வு கிடைக்க உள்ள நிலையில் அதை தடுப்பதற்காகவும் இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உரிய விசாரணை மேற்கொண்டு தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT