Published : 14 Aug 2022 04:25 AM
Last Updated : 14 Aug 2022 04:25 AM
சென்னையில் தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.15 கோடி நகைகள் கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில் ஃபெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (ஃபெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு நேற்று மாலை சென்ற ராணி அண்ணா நகரை சேர்ந்த வாடிக்கையாளர் டேவிட் என்பவர், காவலாளி வெளியே மயங்கி கிடப்பதையும், அலுவலகத்தில் பொருட்கள் சிதறிக் கிடப்பதையும், அறைக்குள் ஊழியர்கள் அடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கூடுதல் காவல்ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். அங்கு மயங்கிக் கிடந்த காவலாளி சரவணன் மற்றும் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிளை மேலாளர் வத்தலகுண்டை சேர்ந்த சுரேஷ், ஊழியர் விஜயலட்சுமி ஆகியோரை போலீஸார் மீட்டு முதலுதவி அளித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த நிறுவனத்தில் உள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:
இந்த நிறுவனத்தில் சேவைமைய மேலாளராக பணிபுரிந்துவந்த முருகன் என்பவர், தனது 2 நண்பர்களுடன் நேற்று காலைநிறுவனத்துக்கு வந்துள்ளார். வாசலில் நின்றிருந்த காவலாளி சரவணனுக்கு அவர்கள் குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதை குடித்த அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரது கை, கால்களை கட்டி நிறுவனத்தின் வாசலில் ஓரமாக கிடத்திவிட்டு 3 பேரும் உள்ளே சென்றுள்ளனர்.
முருகன் உள்ளிட்ட 3 பேரும் கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் ஊழியர் விஜயலட்சுமியை, கத்திமுனையில் மிரட்டி கட்டிப்போட்டு, அங்கிருந்த கழிவறையில் அவர்களை அடைத்து பூட்டினர்.
பின்னர் நகை வைத்திருக்கும் பாதுகாப்பு பெட்டக அறையின் (ஸ்ட்ராங் ரூம்) சாவியை எடுத்து,அதனை திறந்து அனைத்து நகைகளையும் பையில் போட்டுக்கொண்டனர். கழிவறையில் அடைத்த 3 ஊழியர்களையும் பாதுகாப்பு பெட்டக அறையில் தள்ளி பூட்டிவிட்டு, தங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பினர். மாலையில் வாடிக்கையாளர் ஒருவர் அங்கு வந்த பிறகுதான் இதுபற்றி தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து,நகை அடகு வைத்த பலரும் அந்நிறுவனம் முன்பு குவியத் தொடங்கினர். இதனால் அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் அர்ஜூனா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் ஓடிய நாய், பின்னர் திரும்பியது.
ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.15 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், கொள்ளையடித்து சென்ற முருகன், சென்னை அடுத்த பாடியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, பாடிக்கு சென்ற போலீஸார் அவர் வசிக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தினரிடம் முருகனின் பின்னணி குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT