Published : 14 Aug 2022 04:30 AM
Last Updated : 14 Aug 2022 04:30 AM

கோவை | யூடியூப்பை பார்த்து திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட இருவர் கைது

கோவை

கோவை வடவள்ளி அருகேயுள்ள பொம்மனாம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பெரியராயப்பன் (76). இவரது மனைவி ராஜம்மாள் (67). கடந்த 12-ம் தேதி வீட்டில் பெரியராயப்பன் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டுக்கு வந்த இளம்பெண்ணும், ஓர் ஆணும், பெரியராயப்பனிடம் குடிநீர் கேட்டனர். பெரியராயப்பன் குடிநீர் எடுக்க உள்ளே சென்றபோது, அவரைத் தாக்கி கட்டிப்போட்டனர். இருவரும் பீரோவில் இருந்த இரண்டே கால் பவுன் நகை, ரூ.1,500 ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, தப்ப முயன்றனர்.

அப்போது அங்கு வந்த பெரியராயப்பனின் மகன் பாபு, மருமகள் சங்கீதா ஆகியோர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு, அவர்களை பிடித்து வடவள்ளி போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், இருவரும் சிங்காநல்லூர் அண்ணா நகரைச் சேர்ந்த தினேஷ் (23), சிங்காநல்லூர் மருதுநகரைச் சேர்ந்த செண்பகவள்ளி (24) என தெரிந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘இருவரும், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கூடத்தின் மூலம் செண்பகவள்ளி எம்.பி.ஏ படித்து வருகிறார். தினேஷூம் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.

செண்பகவள்ளியின் படிப்புச் செலவுக்கும், இதர செலவுக்கும் பணம் தேவைப்பட்டதால், யூ-டியூப் மூலம் திருட்டு தொடர்பான திரைப்படக் காட்சிகளை பார்த்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமப் பகுதிகளில் புத்தகம், மருந்துகள் விற்பதுபோல் வீடுகளை நோட்டமிட்டு, தனியாக ஆள் இருக்கும் வீடுகளில் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இருவரையும் கைது செய்து, அவர்கள் எந்தெந்த பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x