Published : 14 Aug 2022 04:00 AM
Last Updated : 14 Aug 2022 04:00 AM
‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், ‘‘தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பதில் கடமை தவறும்அதிகாரிகள் மீது தயவு தாட்சண்யமின்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் நேற்று நடந்தது.
இதில் அவர் பேசியதாவது:
போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் தொடர் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருவதை தடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாமீன், முன்ஜாமீன் கோரி தொடரப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கெனவே தமிழகம், பிறமாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதா என்ற விவரங்களை போலீஸாரிடம் கேட்டுப் பெற வேண்டும்.
அதிக அளவிலான போதைப் பொருட்களை கடத்தினாலோ, விற்பனை செய்தாலோ அவர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற உச்ச நீதிமன்ற முன்மாதிரி தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். இதை ஏற்காமல், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் ஜாமீன், முன்ஜாமீன் வழங்கினால், அந்தவழக்கின் விவரங்களை உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், மாநில அரசு தலைமைகுற்றவியல் வழக்கறிஞரின் கவனத்துக்கும் கொண்டுவந்து மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா, பிடிவாரன்ட் நிலுவையில் உள்ள நபர்களை பிடிக்க போலீஸார் கவனம் செலுத்துகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை சரியாக நடத்தாமல், வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க காரணமாக இருக்கும் அரசு வழக்கறிஞர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு (என்டிபிஎஸ்) நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT