Published : 18 Jul 2022 04:15 AM
Last Updated : 18 Jul 2022 04:15 AM

ராஜபாளையம் தம்பதி கொலை வழக்கில் திருப்பம்: ரூ.500 கோடி மதிப்பிலான ஆவணம், நகைகள் கொள்ளை? - கூலிப்படையை சேர்ந்த இருவர் சிக்கினர்

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வீட்டில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான கடன் ஆவணங்கள், பொருட்கள், நகைகள் திருடு போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்(75). இவரது மனைவி குருபாக்கியம்(68). இவர்களது இரு மகன்களும் வெளியூர்களில் பணிபுரிகின்றனர். ராஜகோபால் தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜபாளையத்தில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் தம்பதி இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். உடல்கள் அழுகி இருந்ததால் இச்சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனத் தெரிகிறது.

இது குறித்து போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:

ராஜகோபால் பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி அளவுக்கு கடன் கொடுத்துள்ளார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் மற்றும் சத்திரப்பட்டியைச் சேர்ந்த தரகர் மூலம் பணம், கொடுக்கல் வாங்கல் செய்துள்ளார். மேலும் முனியம்மன் பொட்டல் தெருவைச் சேர்ந்த பெண்ணுடன் ராஜகோபாலுக்கு தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் 3 பேரும் ராஜகோபாலின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்தப் பெண்தான் கூலிப்படை உதவியுடன் இக்கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் ரகசிய அறையில் இருந்த கோடிக் கணக்கான ரூபாய் கடன் கொடுத்த ஆவணங்கள், பணம் , நகைகள் என சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுதொடர்பாக கூலிப்படையைச் சேர்ந்த இருவர் மற்றும் தரகரை பிடித்து விசாரிக்கின்றனர். மேலும் தலைமறைவான, பெண்ணை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக டிஐஜி பொன்னி, எஸ்பி மனோகரன் மேற்பார்வையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x