Published : 07 Jul 2022 04:10 AM
Last Updated : 07 Jul 2022 04:10 AM

அறிவுரை கூறிய சித்தப்பாவை கொன்ற இளைஞரின் ஆயுள் தண்டனை உறுதி

மதுரை

’வேலைக்கு போ, பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம்’ என அறிவுரை கூறிய சித்தப் பாவை கொன்ற வழக்கில் இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி மாடசாமி. இவரது அண்ணன் மகன் சேகர் என்ற ராஜசேகர். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கூறினார். அதற்கு அங்கிருந்த மாடசாமி, முதலில் வேலைக்கு போ, அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதனால் சித்தப்பா மாடசாமி மீது சேகர் கோபத்தில் இருந்தார்.

மறுநாள் மாடசாமி, அவரது மனைவி காளியம்மாள், மகள் தங்கமணி ஆகியோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மாடசாமியை சேகர் ஆயுதத்தால் குத்தி கொலை செய்தார்.

இந்த வழக்கில் சேகர் கைது செய்யப்பட்டார். விசாரணை முடிந்த நிலையில் சேகருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் 2011-ல் தீர்ப்பளித்தது. தண்டனையை ரத்து செய்யக்கோரி சேகர், உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x