Published : 03 Jul 2022 04:00 AM
Last Updated : 03 Jul 2022 04:00 AM

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் காவல் உதவி ஆணையர் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

சென்னை

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் ஆஜராகுமாறு காவல் உதவி ஆணையருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை சிலர்கடத்தி, மிரட்டி, அவர்களது சொத்துகளை அபகரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட தொழிலதிபர் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை 2021-ம் ஆண்டு சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபிஉத்தரவிட்டார். இதையடுத்து திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி காவல் ஆய்வாளர்பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், மேலும் ஆந்திரதொழிலதிபர் வெங்கட சிவநாககுமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் சிவக்குமார், சரவணன், பாண்டியராஜன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படனர்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய ஆந்திர தொழிலதிபர் வெங்கட சிவநாககுமார், கோடம்பாக்கம் ஸ்ரீ, 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார், மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோருக்கு தங்க இடம், பணம் கொடுத்து உதவியதாக சவுகத் அலி, நந்தகுமார், சரவணக்குமார் ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்தகாவல் உதவி ஆணையர் சிவக்குமார், மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 10-ம்தேதி மதுரவாயலில் உள்ள நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.தொடர்ந்து அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

இந்த வழக்கில் சிவக்குமார் மீதுபல குற்றச்சாட்டுகள் உள்ளதால், இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x