Published : 26 Apr 2022 07:31 AM
Last Updated : 26 Apr 2022 07:31 AM
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை என்கிற ராமர்(70), கோயில் பூசாரி. இவரது மகன் நல்லதம்பி(44). முதலைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான குளத்தில் அப்பகுதியினர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவந்தனர்.
இதையடுத்து, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வீரமலை பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இதனால், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள், 2019 ஜூலை 29-ல் வீரமலை, நல்லதம்பி ஆகிய இருவரையும் கொலை செய்தனர். இதுதொடர்பாக, சவுந்தரராஜன் என்கிற பெருமாள், ஜெயகாந்தன், சசிகுமார் உட்பட 6 பேரை குளித்தலை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலர், இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், குற்றம்சாட்டப்பட்ட சவுந்தரராஜன் என்கிற பெருமாள், ஜெயகாந்தன், சசிகுமார், ஸ்டாலின், பிரபாகரன், பிரவீன்குமார் ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் நஷ்டஈட்டை முதல் குற்றவாளியான சவுந்தரராஜன் என்கிற பெருமாள் வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். கவியரசு, சண்முகம், ஹரிஹரன், நடராஜன் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT