Published : 27 Mar 2022 04:00 AM
Last Updated : 27 Mar 2022 04:00 AM
ஆம்பூரில் ஏடிஎம் மையங்களில் கமிஷனுக்கு பணம் எடுத்து கொடுக்கும் கும்பலை சேர்ந்த 4 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 23 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரையும் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு பேர் தொடர்ந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆம்பூர் வாத்திமனை பகுதியைச் சேர்ந்த முகமது கான் (32) மற்றும் குபா மசூதி இரண்டாவது தெருவைச் சேர்ந்த சையத் மொய்தீன் (30) என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் 23 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது.
இருவரையும் பிடித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில், ஆம்பூர் பர்ணக்கார தெருவைச் சேர்ந்த ரபீக் அஹ்மது (31) மற்றும் மொயின் அலி (31) ஆகியோர் கொடுத்த வேலையின்படி ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்து விடுவோம் என்றும், இதற்கு கமிஷன் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ரபீக் அஹ்மது, மொயின் அலியை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இவர்கள் 4 பேருக்கும் பணம் கொடுப்பது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இக்பால், சவுதி, நபில் ஆகியோர் என்றும் அதேபோல், வேலூர் மண்டி தெருவைச் சேர்ந்த மார்வாடி உமாராம் மற்றும் சென்னையைச் சேர்ந்த மார்வாடி திலீப் ஆகியோரும் தங்களுக்கு இதுபோன்ற பணத்தை எடுத்து கொடுக்கச் சொல்லி கமிஷன் தருவார்கள் என கூறியுள்ளனர்.
இந்த தகவலால் அதிர்ச்சி யடைந்த காவல் துறையினர் இந்தப் பணம் ஹவாலா பணப் பரிமாற்றமா? அல்லது வேறு சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக பணம் கைமாற்றப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சென்னை வருமான வரித்துறை துணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆம்பூர் நகர காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் இருந்த 4 பேரையும் ஒப்படைத்தனர்.
பின்னர், 4 பேரையும் விசாரணைக்காக அவர்கள் சென்னை அழைத்துச் சென்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் வேலூர் மற்றும் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT